‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை சுமார் 3 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் (NDRSC) தெரிவித்துள்ளது.
இதுவரை 299,513 வீடுகளுக்கு நிவாரணக் கொடுப்பனவுகள் சென்றடைந்துள்ளன. மொத்தம் 469,457 வீடுகள் இந்த நிவாரணத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளன. எஞ்சியுள்ள 169,944 வீடுகளுக்கான கொடுப்பனவுகள் தற்போது நிலுவையில் உள்ளன, அவை விரைவில் வழங்கப்படவுள்ளன.
இந்த நிவாரணத் திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 7.487 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது.
வீடுகள் தவிர்ந்த ஏனைய துறைகளுக்கான நட்டஈடு வழங்கும் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும். வீடுகளுக்கான மேலதிக நட்டஈடு கொடுப்பனவுகள் (ஆரம்பக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக) அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்தில் வழங்கப்படவுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவை மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.