சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் செயல்முறை தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அலோக பண்டார இன்று (30) தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் இந்த நஷ்டஈட்டுத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடு சுத்திகரிப்பு கொடுப்பனவு (ரூ. 25,000): பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட 434,375 வீடுகளில், இதுவரை 423,914 வீடுகளுக்கான கொடுப்பனவுகள் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் (ரூ. 50,000): சேதமடைந்த வீட்டு உபகரணங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்காக 163,509 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 115,757 வீடுகளுக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான விசேட கொடுப்பனவு (ரூ. 15,000): சூறாவளியால் பாதிக்கப்பட்ட 195,157 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 141,382 மாணவர்களுக்குத் தலா 15,000 ரூபா வீதம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, நஷ்டஈடு உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மிகக் கடினமாக உழைத்து வருவதாகச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இது மிகவும் சிக்கலான மற்றும் பாரிய பணி என்பதால், இதில் ஏற்படும் சில காலதாமதங்களுக்காகக் அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவது முறையல்ல.
எஞ்சியுள்ள நஷ்டஈட்டுத் தொகைகளை விரைவாக வழங்கி முடிக்க அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

