ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரிய உயர்வைக் கண்டுள்ளன. நேற்றைய தினம் 100 டொலருக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலை, தற்போது 5 சதவீதம் வரை அதிகரித்து 106.29 டொலராகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) மசகு எண்ணெய் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் உயர்வடைந்து, ஒரு பீப்பாய் 104.29 டொலராக அதிகரித்துள்ளது.
போர் பதற்றங்கள் விரைவில் தணியும் என்ற நம்பிக்கையில் கடந்த சில நாட்களாக எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வந்தன. எனினும், “போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் மற்றும் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்” என டிரம்ப் ஆற்றிய உரை, எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுடனான மோதல் நீடிப்பதனால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடான போக்குவரத்து மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளதே இந்தத் திடீர் விலை உயர்விற்கு முக்கிய காரணமாகும்.
ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை, விநியோகச் சங்கிலியில் பாரிய இடைவெளியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் உலகப் பொருளாதாரத்தில் மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறைகளில் செலவுகள் அதிகரிப்பதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விலை உயர்வு இந்தியா, இலங்கை உள்ளிட்ட இறக்குமதியைச் சார்ந்துள்ள ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். எரிபொருள் விலையேற்றம் காரணமாகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிர்நோக்கி வரும் நாடுகள், இந்த புதிய விலையேற்றத்தினால் மேலதிக நெருக்கடிகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் இந்தத் தளம்பல் நிலை குறித்து ஓபெக் (OPEC) நாடுகள் மற்றும் ஏனைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் அவசர ஆலோசனைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.