புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

images 9 4

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுயாதீன தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் வைத்தியர் சமல் சஞ்சீவ ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்தனர்.

புற்றுநோய் வைத்தியசாலையில் மாத்திரம் சுமார் 40 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வெளிச்சந்தையில் பதிவு செய்யப்படாத மற்றும் தரமற்ற மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ குற்றம் சாட்டினார். “அந்த மருந்து போத்தல்களுக்குள் இருப்பது சாதாரண நீரா, உப்பு நீரா அல்லது பக்டீரியாக்களா என்பது கூடத் தெரியாத நிலையில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என அவர் எச்சரித்தார்.

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் மற்றும் அவற்றின் பதிவுகளை முறையாக உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் CID அதிகாரிகள் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Exit mobile version