சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பயணிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, எரிபொருள் விநியோகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ‘QR’ குறியீட்டு முறையிலான ஒதுக்கீட்டு (Quota) முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 11, 2026) முதல் எதிர்வரும் ஏப்ரல் 18-ஆம் திகதி வரை பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் எவ்வித QR கட்டுப்பாடுகளும் இன்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, பண்டிகைக் காலத்தில் மக்களின் பயணத் தேவைகள் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களால் கடந்த மார்ச் 15-ஆம் திகதி முதல் இந்த QR முறை மீள அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைக் கொண்டு புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய முடியும் என அவர் உறுதி அளித்தார்.
இருப்பினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் அதிகப்படியான நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ‘ஒற்றை – இரட்டை’ (Odd-Even) இலக்க முறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக (1, 3, 5, 7, 9) இருப்பின் ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும், இரட்டை எண்ணாக (0, 2, 4, 6, 8) இருப்பின் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தக் காலப்பகுதியில் டீசல் விநியோகத்திற்கான QR நடைமுறையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் வாகனங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெளிவுபடுத்தியுள்ளார். சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்கள் அல்லது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் குறித்துக் கடும் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

