திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி அன்று புதிதாக அமைத்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் உடன் இருந்தவர்களுக்கு, எதிர்வரும் ஜனவரி 14 ந் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி எம்.என்.எம். சம்சுடீன் இன்று (நவம்பர் 26) அழைப்பாணை (Summons) விடுத்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாராதிபதி கல்யாணவன்ஸ திஸ்ஸ தேரர் மற்றும் அவருடன் இருந்த சிலருக்கு எதிராக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களமும்,திருகோணமலை துறைமுக பொலிஸாரும் முன்வைத்த மனுவை ஆராய்ந்த பின்னர் இவ் வழக்கில் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அடுத்த தவணை அன்று இது தொடர்பான விரிவான அறிக்கையை பொலிஸார் மன்றிற்கு முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் சார்பில் அதன் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளும்,திணைக்களம் சார்ப்பாக சட்டத்தரணியும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதே வேளை பொலிஸ் தரப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,திருகோணமலை பிரிவிற்கான பொலிஸ் அத்தியட்சகர்,துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிராளிகளோ அவர்களது சார்பில் சட்டத்தரணிகளோ மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.

