ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாட்டின் சாட்சிகளில் ஒருவரான அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி நிதி முகாமையாளரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலதிகச் சாட்சி விசாரணைகளுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுசன ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அவரது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிக் கட்டணமான ரூபா 240,000/- ஐ, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியிலிருந்து செலுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழுவால் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராகக் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.