யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
பொதுவாகத் தேசியக் கொடி ஏற்றப்படும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்கும் வகையில் நேராக நின்று வணக்கமுறை பின்பற்றுவது வழக்கம். ஆனால், மழை காரணமாக அமைச்சர் ஒரு கையால் குடையைப் பிடித்தவாறு மறு கையால் கொடியை ஏற்றியுள்ளார்.
நாட்டின் கௌரவமாகக் கருதப்படும் தேசியக் கொடியை ஏற்றும் போது அமைச்சர்கள் போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் எனவும், இந்தச் செயல் தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இது குறித்துப் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

