தேசிய பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்: சுரேஷ் சலேயின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டி கேர்ணல் கெலும் மத்துமகே சார்பில் மன்றில் வாதம்!

03 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் கேர்ணல் கெலும் மத்துமகே தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த அதிரடியான வாதங்களை முன்வைத்தார்.

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்காகப் புலனாய்வுப் பிரிவினர் ஆற்றிய அர்ப்பணிப்புகளைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்த நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர் என்பதையும், குமரன் பத்மநாதனை (KP) மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வந்தவர் என்பதையும் மன்றுக்கு நினைவூட்டினார். இவ்வாறான முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுப்பது தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் எச்சரித்தார். 2015-ஆம் ஆண்டிலும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதுகாப்பு கட்டமைப்பு சீர்குலைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு – வவுனதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையைத் திசைதிருப்ப முயற்சித்ததாகக் கேர்ணல் கெலும் மத்துமகே மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்த சட்டத்தரணி, இதற்கு எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்தார். அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் நேர்காணலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஷானி அபேசேகரவின் தலைமையிலான விசாரணைகளில் தமக்கு நீதி கிடைக்காது எனவும் அவர் வாதிட்டார். புலனாய்வு அதிகாரிகளை இவ்வாறு வேட்டையாடுவதால் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

 

Exit mobile version