நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
70 ரூபாய் பெறுமதியான 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல்களை, தலா 90 ரூபாய் மற்றும் 100 ரூபாய் என அதிக விலைக்கு விற்பனை செய்தமை.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தலைமை அலுவலக விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் இந்த வர்த்தகர் தவறிழைத்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.