2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டத்திற்கு முரணானது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போராட்டக்களம் மீதான தாக்குதலின் போது, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகப் போராட்டக்காரர் ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு (Private Complaint) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க அப்போதைய கொழும்பு பிரதம நீதவான் தீர்மானித்திருந்தார்.
நீதவான் நீதிமன்றின் தீர்மானத்திற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, நீதவான் நீதிமன்றின் முந்தைய தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம், தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக மீண்டும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

