சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர் 07, 2025) உத்தியோகபூர்வமாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஃபுஜியன் சீனாவின் மூன்றாவது மற்றும் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலாகும். இந்தக் கப்பலில், மூன்று வகையான விமானங்களை ஏவக்கூடிய மின்காந்த கவண்கள் (ElectroMagnetic Aircraft Launch System – EMALS) உள்ளதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
EMALS எனப்படும் புதிய தொழில்நுட்பம், விமானங்கள் அதிக ஆயுதங்களைச் சுமந்து செல்ல அனுமதிக்கிறது. இதனால், அதிக தொலைவில் உள்ள எதிரி இலக்குகளைத் தாக்க முடியும் எனவும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா வடிவமைத்துள்ள இந்த ஃபுஜியன் கப்பல் அமெரிக்கக் கடற்படைத் தொழில்நுட்பத்திற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாரத் தொடக்கத்தில் ஹைனான் தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலைப் பார்வையிட்டிருந்தார்.