சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், காந்தப்புல தொழில்நுட்பத்தில் (Magnetic Levitation) இயங்கும் ரயில் மூலம் மணிக்கு 700 கி.மீ வேகத்தை எட்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
1 தொன் எடை கொண்ட இந்த ரயில், இயக்கப்பட்ட வெறும் 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ என்ற உச்ச வேகத்தை அடைந்தது. இது ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கு இணையான சக்தி வாய்ந்த முடுக்கமாகும் (Acceleration).
400 மீட்டர் (1,310 அடி) நீளமுள்ள பிரத்யேக காந்தப்புல பாதையில் இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை அடைந்த பின்னர் ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
இந்த ரயில் தண்டவாளங்களைத் தொடாமல், காந்த விசை மூலம் அதன் மேலே மிதந்தபடி செல்லக்கூடியது. இதனால் உராய்வு (Friction) குறைக்கப்பட்டு அதீத வேகத்தில் பயணிக்க முடிகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஆராய்ச்சியாளர்கள், இந்தத் தொழில்நுட்பம் மூலம் நீண்ட தொலைவில் உள்ள நகரங்களைச் சில நிமிடங்களில் இணைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உலகின் அதிவேக காந்தப்புல ரயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.