மின்சார வாகன (EV) விற்பனையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவின் BYD நிறுவனம் உலகின் புதிய முடிசூடா மன்னனாக உருவெடுத்துள்ளது.
வருடாந்த விற்பனையில் டெஸ்லாவை BYD முறியடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2025-ஆம் ஆண்டில் BYD நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை 28% அதிகரித்து, 2.25 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டெஸ்லா நிறுவனத்தின் கார் விற்பனை 9% குறைந்து, உலகளவில் 1.64 மில்லியன் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது டெஸ்லா சந்திக்கும் தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டு விற்பனை வீழ்ச்சியாகும்.
சர்வதேச சந்தை ஆய்வாளர்களின்படி, டெஸ்லா நிறுவனம் தனது முதலிடத்தை இழந்தமைக்கு பின்வரும் காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மலிவான விலை மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன நிறுவனங்களின் (முக்கியமாக BYD) கடும் போட்டி.
எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சமூக ஊடகச் செயல்பாடுகள் மீதான வாடிக்கையாளர்களின் அதிருப்தி. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்லாவின் புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறியமை.
சீனாவின் BYD நிறுவனம் மின்கல (Battery) தயாரிப்பில் பெற்றுள்ள அனுபவமும், அரசாங்கத்தின் ஊக்கத்தொகைகளும் அந்த நிறுவனம் மிக வேகமான வளர்ச்சியை எட்ட உதவியுள்ளதாகக் கருதப்படுகிறது.

