ஒழுக்கக் குறைபாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக, சீன இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஜெனரல்களில் ஒருவரான ஜாங் யௌஷியா (Zhang Youxia) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சீன இராணுவத்தின் மிகச் சக்திவாய்ந்த அமைப்பான மத்திய இராணுவ ஆணைக்குழுவின் (CMC) இரண்டு துணைத் தலைவர்களில் இவரே மூத்தவர் ஆவார்.
கடந்த சில ஆண்டுகளாகச் சீன இராணுவ அதிகாரிகள் மீது நடத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை பார்க்கப்படுகிறது.
இராணுவத்தைச் சீரமைப்பதுடன், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு இராணுவத்தின் முழுமையான விசுவாசத்தை உறுதிப்படுத்துவதே இந்த அதிரடி நடவடிக்கைகளின் நோக்கம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் இருக்கும் ஷி ஜின்பிங், 2012-ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து பெரும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்.
இந்த இயக்கத்தின் கீழ் இதுவரை 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு ஊழல் மற்றும் ஒழுக்க மீறல் புகார்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் மிக உயர்ந்த நிலையில் உள்ள இராணுவத் தலைவர்களே விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டிகளையும், ஷி ஜின்பிங்கின் பிடி இறுகுவதையும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.