சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி மாதத்திற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 49 விமான வழித்தடங்களுக்கான அனைத்துச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘Flight Master’ என்ற விமானத் தகவல் தளத்தின் தரவுகளின்படி, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களை விட பெப்ரவரியில் விமான ரத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஜப்பானுக்கான சீன விமானங்களின் ரத்து வீதம் 47.2 ஆகக் காணப்பட்டது.
சீனாவின் மூன்று பிரதான விமான நிறுவனங்களான Air China, China Eastern Airlines மற்றும் China Southern Airlines ஆகியவை ஜப்பான் பயணிகளுக்காக விசேட சலுகைகளை அறிவித்துள்ளன. பயணிகள் ஒருமுறை இலவசமாகத் தமது பயணத் திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தப்படாத பயணப் பகுதிகளுக்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம்.
ஜனவரி 26 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் பயணச்சீட்டுப் பெற்றவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும் டோக்கியோ, ஒசாகா, நாகோயா, ஃபுகூஒக்கா, சப்போரோ மற்றும் ஓகினாவா போன்ற முக்கிய நகரங்களுக்கான பயணங்களுக்கு இது செல்லுபடியாகும்.
ஜப்பானில் சீன மக்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறலாம் எனச் சீன வெளியுறவு அமைச்சகம் விடுத்த பயண எச்சரிக்கையைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இச்சலுகைகள் மார்ச் 29 முதல் அக்டோபர் 24 வரை திட்டமிடப்பட்டுள்ள விமானங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பாதுகாப்புச் சூழல் காரணமாக இந்தப் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளமை சர்வதேச அளவில் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

