சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

1200 675 25395250 thumbnail 16x9 1

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

2000 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த இந்த பாதிப்பு, 2020 இல் 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.  உலகளாவிய அளவில் இது சிறுவர்களிடையே 3.40% லிருந்து 6.53% ஆகவும், சிறுமிகளிடையே 3.02% லிருந்து 5.82% ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “இந்த உயர்வு ஒரு எச்சரிக்கை மணியாகும். எனினும், முறையான பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு நல்ல செய்தி,” என்கிறார்.

இரத்த அழுத்தத்தின் வகைகள்

முதன்மை இரத்த அழுத்தம்: 

இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் கிடையாது. இதுவே சிறுவர்களிடையே காணப்படும் பொதுவான வகை.

இரண்டாம் நிலை இரத்த அழுத்தம்: 

இது சிறுநீரக நோய், இதய நோய், ஹோர்மோன் குறைபாடுகள் அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக ஏற்படுகிறது.

சிறுவர்களிடம் காணப்படும் உயர் இரத்த அழுத்த அறிகுறிகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அடிக்கடி ஏற்படும் தலைவலி, பார்வையில் குறைபாடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், முகம் சிவத்தல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, வலிப்பு அல்லது வாந்தி போன்றவை இதற்கான அறிகுறிகள் என கூறப்படுகிறது.

 

 

Exit mobile version