செம்மணி மனிதப் புதைகுழி நீர் வெளியேற்றும் பணி ஆரம்பம் – நிலத்தை மாற்ற நீதிமன்றம் தடை!

MediaFile 5 3

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இன்று (19) பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலக (OMP) அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) இன்று பிற்பகல் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், பணிகளைத் தொடர முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, பெப்ரவரி மாதம் 9-ம் திகதி நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் நீர் வெளியேற்றப்படும்.

இந்தப் பணிகள் அனைத்தும் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழும், சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) முன்னிலையிலும் நடைபெறும். நீர் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே அடுத்தகட்ட அகழ்வுக்கான திகதி அறிவிக்கப்படும்.

மயான வளாகத்தில் நல்லூர் பிரதேச சபையினரால் பாதை சீரமைக்கப்பட்டமை குறித்துச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். இதனைப் பரிசீலித்த நீதிபதி பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்:

அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை அந்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தை மாற்றும் செயல்களையோ செய்யக்கூடாது.

நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி எவ்வித கட்டுமானப் பணிகளும் அங்கு மேற்கொள்ளப்படக் கூடாது.

பாதிக்கப்பட்டோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் முன்னிலையாகினர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீர் அகற்றும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 9-ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 

 

 

Exit mobile version