யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

images 8

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதால், அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா. ரணித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று (நவம்பர் 03) நேரில் சென்று பார்வையிட்டனர்.

புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதால், அடுத்த கட்ட அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீண்டும் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆராயப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version