காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) நேற்று (16) இரவு கைதிகள் குழுவொன்று முன்னெடுத்த திடீர் போராட்டத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘டி’ (D) விடுதியில் இருந்த கைதிகள் குழுவொன்று நேற்று மாலை சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின் சொத்துக்களுக்குப் பலத்த சேதங்களை விளைவித்துள்ளனர்.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிலைமை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் வழங்கியுள்ள தகவலின்படி, வன்முறையில் ஈடுபட்ட மற்றும் போராட்டத்தைத் தூண்டிய கைதிகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு பாதுகாப்பு வசதிகள் கொண்ட சிறைப்பிரிவுகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவம் எதனால் ஏற்பட்டது மற்றும் இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பூசா சிறைச்சாலையில் நாட்டின் முக்கிய குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

