மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, 35,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் ஏந்திய கப்பல் ஒன்று சமீபத்தில் நாட்டை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து மேலதிக எரிபொருள் தொகையைக் கொண்ட மூன்று பிரதான கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பினை உறுதி செய்ய முன்கூட்டியே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு, அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த எரிபொருள் தொகையானது, அவை நாட்டை வந்தடையும் சந்தர்ப்பத்தில் நிலவும் சர்வதேச சந்தை விலையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய பூகோள அரசியல் நெருக்கடிகளால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சவால்களை முறியடிக்க, இந்தியாவுடன் அரசாங்கத்திற்கு இடையிலான (G-to-G) அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ரஷ்யாவிடமிருந்தும் எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எரிபொருள் விநியோகத் தடையின்றிப் பேணுவதற்காக, தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறைமை மூலம் விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் எரிபொருள் தேவையை உறுதிப்படுத்துவதுடன், நாட்டின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் போக்குவரத்துத் துறை பாதிக்கப்படாதவாறு கையிருப்பு முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை மற்றும் கப்பல் போக்குவரத்துச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், எரிபொருள் கையிருப்பினைப் பேணுவதில் இலங்கை முன்னுரிமையுடன் செயற்பட்டு வருகின்றது.