அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில், பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த லியாம் ரமோஸ் (Liam Ramos) என்ற 5 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் குடிவரவு மற்றும் குடியகல்வு அமலாக்கத்துறை (ICE) அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் பாடசாலை முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிய லியாம் ரமோஸ், தனது வீட்டு வாசலில் வைத்து அதிகாரிகளால் மறிக்கப்பட்டார்.
அதிகாரிகள் சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, அவனது வீட்டு கதவைத் தட்டச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். வீட்டிற்குள் இருப்பவர்களை வெளியே வரவழைப்பதற்காக 5 வயது சிறுவனை அதிகாரிகள் “தூண்டிலாக” (Bait) பயன்படுத்தியதாக அந்தப் பாடசாலை மாவட்ட கண்காணிப்பாளர் சீனா ஸ்டென்விக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
லியாமின் குடும்பத்தினர் முறையாகத் தஞ்சம் கோரி (Asylum) விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக எந்தவொரு நாடு கடத்தல் உத்தரவும் இல்லாத நிலையிலேயே, அவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தனித்த ஒன்றல்ல. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அதே பாடசாலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இவ்வாறான சோதனைகளின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர் அதிரடிச் சோதனைகளால் அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ஜனவரி 7-ஆம் திகதி ரெனி நிக்கோல் குட் என்ற 37 வயது பெண்மணி ICE அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. ஒரு அமெரிக்கக் குடிமகளான அவர், தனது அண்டை வீட்டாருக்கு எதிராக நடந்த சோதனையைப் படம் பிடித்ததற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தற்போது 5 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருப்பது, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான கொந்தளிப்பை மேலும் அதிகரித்துள்ளது.