உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் விமர்சனங்களுக்குக் கத்தோலிக்க திருச்சபை பதிலளித்துள்ளது. இக்கைது நடவடிக்கை தொடர்பில் திருச்சபையின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்றைக் கொழும்பு மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை சிரில் காமினி (Fr. Cyril Gamini) இன்று நடத்தினார்.
கடந்த காலங்களில் கோத்தபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன அல்லது முடக்கப்பட்டிருந்தன என அருட்தந்தை சுட்டிக்காட்டினார். ஆனால், 2024 நவம்பரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே, சுமார் 16 மாத காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மிகவும் சுயாதீனமாகவும் நேர்த்தியாகவும் விசாரணைகளை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
சுரேஷ் சலேயின் கைது என்பது திடீர் நடவடிக்கை அல்ல என்றும், கடந்த 16 மாதங்களாக நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் நேரடி விளைவு இது என்றும் அவர் குறிப்பிட்டார். “கைது செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாகத் திருச்சபை நம்புகிறது; எனினும் அவர் தற்போது ஒரு சந்தேக நபர் மட்டுமே. அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்” என அருட்தந்தை சிரில் காமினி வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தைச் சமூக ஊடகங்கள் அல்லது அரசியல் மேடைகளில் தவறாகச் சித்தரித்து, சமூகத்திற்குள் தேவையற்ற கருத்துக்களைப் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாகத் தேசியவாதத்தைத் தூண்டி அல்லது அரசியல் நோக்கங்களுக்காக இந்த விசாரணையைச் சீர்குலைக்க முயல்வது, தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என அவர் எச்சரித்தார். புலனாய்வுத் திணைக்களம் தனது கடமையைச் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், மக்கள் பொறுமையுடன் இறுதி முடிவிற்காகக் காத்திருக்க வேண்டும் எனவும் திருச்சபை சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.