கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 5,000 கூடுதல் நிரந்தர வதிவிட (PR) இடங்களைக் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் (Lena Metlege Diab) இது குறித்துத் தெரிவிக்கையில், கனடாவின் பன்முகத்தன்மை மற்றும் மொழி வளத்தைப் பேணுவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டார். தற்போது மொத்த நிரந்தர வதிவிடச் சேர்க்கையில் 8.9 சதவீதமான இடங்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களால் நிரப்பப்படுகின்றன.
பிரெஞ்சு மொழிப் பிரிவினருக்கான குடியேற்ற இலக்குகளைப் பின்வருமாறு உயர்த்த கனடா திட்டமிட்டுள்ளது:
2026: 9 சதவீதம்
2027: 9.5 சதவீதம்
2028: 10.5 சதவீதம்
2029-க்குள்: 12 சதவீதம் (இறுதி இலக்கு)
இந்த இலக்குகளை அடைய கனடா அரசாங்கம் பல விசேட வழிகளை உருவாக்கியுள்ளது.
எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry): பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களுக்கெனப் பிரத்யேகக் குலுக்கல் முறைகள்.
பிராங்கோபோன் மொபிலிட்டி (Francophone Mobility): எளிதான முறையில் வேலை அனுமதி (Work Permit) வழங்கும் திட்டம்.
மாணவர் முன்னோடித் திட்டம் (Student Pilot): பிரெஞ்சு சமூகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான நேரடி வதிவிடப் பாதை.
இந்த அறிவிப்பு பிரெஞ்சு மொழித் திறன் கொண்ட சர்வதேசத் திறமையாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், நிரந்தரக் குடியுரிமைக்கான எளிய வழிகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கனடாவின் பொருளாதார மற்றும் கலாசாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.