பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு மற்றும் புதிய கொடுப்பனவு முறைமைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ. 1,550 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேலைக்குச் சமூகமளிக்கும் நாட்களுக்காக நாளொன்றுக்கு ரூ. 200 மேலதிக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு ரூ. 1,750 வரை வருமானம் பெற முடியும்.
இந்தத் திட்டத்தை அமுல்படுத்த 2026 பட்ஜெட்டில் ரூ. 5,000 மில்லியன் (500 கோடி ரூபா) ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1-ஆம் திகதி முதல் அமலாகும் வகையில், முதல் 06 மாதங்களுக்கு அந்தந்தப் பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாகவே இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
அதன் பின்னர், உரிய தரப்பினருடன் ஆலோசித்து, இடைத்தரகர்கள் இன்றி இந்த ஊக்குவிப்புத் தொகையை நேரடியாகத் தொழிலாளர்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் (Bank Accounts) வரவு வைக்கப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த இந்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. பெருந்தோட்டத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த சம்பளப் போராட்டங்களுக்கு இது ஒரு நிலையான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

