ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

MediaFile 10 1

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர் மூலம் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் 4,074 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பாரிய திட்டத்தின் 06 உப-திட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டிலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், முந்தைய ஒப்பந்தக்காரரின் பலவீனமான செயல்பாடுகள் காரணமாக அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

திட்டத்தை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கில், தேசிய போட்டி விலைமனு கோரல் (National Competitive Bidding) முறையில் புதிய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மொத்தம் 06 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தகுதியான ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த நிர்மாணப் பணிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது பூரண அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒபேசேகரபுர மற்றும் அருணோதய மாவத்தை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த முறையான வீட்டுத் திட்டம் விரைவில் நனவாகவுள்ளது.

 

 

Exit mobile version