மன்னார் தீவு மக்களின் விருப்பம் இல்லாமல், தொடர்ந்து அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதேச மக்கள் முன்வைத்த சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ரீதியில் மீளாய்வு செய்யப்பட்ட வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிக காற்று ஆற்றல் வளம் கொண்ட பகுதியாக மன்னார் தீவில் மொத்தம் மூன்று காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன இது 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
Windscape Mannar (Pvt) Ltd: 20 மெகாவாட் திட்டம், எதிர்வரும் டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Hayleys Fenton: 50 மெகாவாட் திட்டம், 2026 டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னார் தீவு மக்களின் எதிர்ப்பின் காரணமாக இந்தக் கருத்திட்டங்களின் நடைமுறைப்படுத்தலை இடைநிறுத்தும் சூழல் நிலவியது. இந்தநிலையில், ஜனாதிபதியினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பின்வரும் அறிவித்தல் வழங்கப்பட்டு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:
குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள் மன்னார் தீவு மக்களின் விருப்பத்துடன் மட்டுமே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், இந்த மூன்று திட்டங்களுக்கு மேலதிகமாக வேறு காற்றாலைத் திட்டங்கள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
அவ்வாறு புதிய காற்றாலைத் திட்டங்கள் அமைப்பதாயின், அதற்குப் பொருத்தமான மாற்று இடம் தெரிவு செய்யப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

