இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினம் அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் கண் கண்ணாடி கடை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் எதிர்புறம் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நிஜாம் வீட்டின் முன் நின்று கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் உள்ளே குதித்த 3 மர்மநபர்கள் நிஜாமின் கழுத்தை அறுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான நிஜாம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பின்னர் வீட்டுக்குள் நுழைந்த அந்த கும்பல் நிஜாமின் மனைவி ஆயிஷா பேபியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அலுமாரித் திறப்பைக் கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், ஆயிஷா பேபியைக் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்து அலுமாரித் திறப்பைப் பறித்து அலுமாரியில் இருந்த 100 பவுண் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்றது.
இது குறித்து தகவலறிந்த நிஜாமின் உறவினர்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் கொலை, கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பியும் சம்பவம் நடந்த வீட்டுக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
தொழில் போட்டி காரணமாக தொழிலதிபர் நிஜாம் கொல்லப்பட்டாரா? அல்லது கொள்ளைச் சம்பவத்தின்போது கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலதிபரைக் கொலை செய்துவிட்டு 100 பவுண் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#IndianNews

