‘டித்வா’ புயலினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது முந்தைய வாழ்க்கையை விடச் சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வகையில், புதிய வீடுகளை நிர்மாணிக்க தலா 50 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இன்று காலை கல்நேவ, ஹந்துன்கம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் 26 பயனாளிகளுக்கு முதற்கட்ட நிதியை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்:
முழுமையாகச் சேதமடைந்த ஒரு வீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபாயானது, பணப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் 20, 15, 15 இலட்சம் என மூன்று கட்டங்களாக வழங்கப்படும்.
“நிதி வழங்குவதில் எவ்வித தாமதமும் இருக்காது; மக்கள் 2 முதல் 3 மாதங்களுக்குள் வீடுகளை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டும்” என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
பகுதியளவில் சேதமடைந்த அல்லது வசிக்க முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வீட்டுத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வழங்கிய புள்ளிவிபரங்கள்:
தற்போதைய நிலவரப்படி 6,000 வீடுகள் முழுமையாகவும், சுமார் 18,000 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்த ஆண்டு மேலதிகமாக 31,000 வீடுகளை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ‘எமக்கு ஒரு வீடு’ திட்டத்தின் கீழ் கிராமப்புற வறிய மக்களுக்காக 10,000 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக 2,500 வீடுகள் (தலா 20 இலட்சம் வீதம்) கட்டப்படும்.
எமது நோக்கம் மக்கள் தற்போதைய வாழ்க்கைத் தரத்திலேயே இருப்பதை விரும்புவதல்ல; அவர்கள் அதிலிருந்து மேம்பட்ட நிலைக்குச் செல்ல வேண்டும். சிறந்த வருமானம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் மன அமைதியுடன் கூடிய ஒரு இல்லத்தை உறுதிப்படுத்துவதே எமது அரசின் இலக்கு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.