மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சைபர் தாக்குதல்களுக்கு (Cyber Attacks) எதிராகத் தேரர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செவ்வாய்க்கிழமை (13) முறைப்பாடு செய்துள்ளது.
முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய தேரர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இணைந்து, பௌத்த மதகுருமார்களைக் குறிவைத்துத் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் அரசியல்வாதி ஒருவரால் மிஹிந்தலை தேரரைப் பற்றிப் பயன்படுத்தப்பட்ட ‘வனச்சாரி’ போன்ற வார்த்தைகள், ஒட்டுமொத்த மகா சங்கத்தினரையும் அவமதிக்கும் செயல் என அவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காகப் பல்வேறு யூடியூப் (YouTube) அலைவரிசைகளைப் பயன்படுத்தி மதகுருமார்களைப் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் கவலை வெளியிட்டனர்.
பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் தேரர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து CID பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை குறித்து நாட்டின் மகாநாயக்க தேரர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நாட்டின் ஆட்சியாளர் மக்கள் மற்றும் மதத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டுமே தவிர, இவ்வாறான அவமதிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.
இக்கட்டான சூழல்களில் தேரர்கள் மௌனம் காக்கப் போவதில்லை என்றும், மதகுருமார்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது எச்சரித்தனர்.

