திருகோணமலை – சேருநுவர காவல்பிரிவுக்குட்பட்ட சோமவதி வீதியில் அமைந்துள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த விகாரையில் கடந்த 6-ஆம் திகதி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று ஏற்கனவே திருடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த மற்றொரு சிலையே நேற்று (10) மீண்டும் திருடப்பட்டுள்ளது.
இன்று காலை சிலை திருடப்பட்டிருப்பதை அவதானித்த விகாரை தரப்பினர், இது குறித்து சேருநுவர காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் இரண்டு தடவைகள் புத்தர் சிலைகள் திருடப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.