தையிட்டியில்: இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புத்தர் சிலை மீட்பு – பிக்கு உள்ளிட்ட குழுவினர் விசாரணைக்கு!

image 7ebec97288

தையிட்டி திஸ்ஸ விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை, காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையில் இன்றைய பௌர்ணமி தினத்தில் புதிய சிலை ஒன்றை நிறுவ முயற்சிகள் நடந்தன. இதற்குத் தமிழ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், கடந்த 30-ஆம் திகதி விகாராதிபதி தான் எவ்வித புதிய கட்டுமானங்களையோ அல்லது விசேட பூஜைகளையோ முன்னெடுக்க மாட்டேன் என அறிவித்திருந்தார்.

விகாராதிபதியின் அறிவிப்பையும் மீறி, பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழுவினர் புத்தர் சிலையுடன் காங்கேசன்துறை இராணுவ சிற்றுண்டிச்சாலையில் காத்திருப்பதாகக் காங்கேசன்துறை பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த புத்தர் சிலையை மீட்டனர்.

சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு மற்றும் அவருடன் இருந்த குழுவினரைப் பொலிஸார் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிகிரியா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தச் சிலையை, தடையை மீறி விகாரையில் நிறுவத் திட்டமிட்டிருந்தார்களா என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தையிட்டி மற்றும் காங்கேசன்துறை பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே காணி உரிமையாளர்கள் விகாரைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தச் சிலை மீட்புச் சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Exit mobile version