இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரித்தானியத் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவரது உரையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படுபவர்களுக்கு எதிராகப் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் ஏற்கனவே தடைகளை விதித்துள்ளது. இந்த நீதி விசாரணை நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது.
நவீன பிரித்தானியாவின் வளர்ச்சியில் தமிழ் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பு மகத்தானது. தமிழர்களின் திடமான நம்பிக்கையும் உறுதியுமே அவர்களின் இந்த வெற்றிக்குக் காரணம்.
“இலங்கையில் எனது பெற்றோர் இழந்த வாய்ப்புகளை, மீண்டும் ஒருமுறை பிரித்தானிய மண்ணில் கட்டியெழுப்ப அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பை நான் அருகிலிருந்து பார்த்துள்ளேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
பிரித்தானியாவில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாக உமா குமரன் தெரிவித்திருப்பது, சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

