கண்டி மாவட்ட செயலக அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அங்கு நேற்று (26) நாள் முழுவதும் பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு நேற்று முன்தினம் அச்சுறுத்தல் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. அதில், செயலக வளாகத்தினுள் 5 குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்துப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் மோப்ப நாய் பிரிவு, விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இணைந்து செயலகம் முழுவதும் தேடுதல் நடத்தினர்.
நேற்று காலை முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில் சந்தேகத்திற்குரிய எவ்வித வெடிபொருட்களோ அல்லது உபகரணங்களோ கண்டெடுக்கப்படவில்லை. இது ஒரு போலி மிரட்டல் (Hoax) எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்த இவ்வாறான மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலி மின்னஞ்சலை அனுப்பிய நபர்களைக் கண்டறிய கணனி குற்றப்புலனாய்வு பிரிவினரின் (CCID) உதவி நாடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.