பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

25 691b58dca001e

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, எதிர்வரும் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

கடந்த மே மாதம் நடந்த வழக்கு விசாரணையின் போது, பசில் ராஜபக்சவின் சட்டக் குழு, அவர் நாற்காலியில் இருந்து விழுந்ததைத் தொடர்ந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பு சிக்கல்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்திருந்தது.

ஒரு அமெரிக்க மருத்துவர் ஆறு மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டதால், அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாடு திரும்புவாரா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.

முந்தைய விசாரணைகளில் அவர் ஆஜராகாத காரணத்தால், அவரது பிணையை ரத்து செய்து பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்று அரச சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், நீதிமன்றம் குறித்த கோரிக்கையை நிராகரித்து, பசில் ராஜபக்சவை அடுத்த திகதியில் (நவ 21) முன்னிலையாக உத்தரவிட்டது.

குறித்த நீதிமன்ற விசாரணை, ஒரு முக்கிய அரசியல் நிகழ்வான நவம்பர் 21ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது நடைபெற உள்ளது. பசில் ராஜபக்ச நாடு திரும்புவாரா என்பது குறித்து அவரது பிரதிநிதிகளிடமிருந்தோ அல்லது குடும்பத்தினரிடமிருந்தோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version