பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அந்நாடு பாகிஸ்தானுடனான தனது பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில் அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த ‘JF-17 Thunder’ ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் பாகிஸ்தானுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
போர் விமானங்களுடன் மேலதிகமாக, ‘Super Mushshak’ ரக பயிற்சி விமானங்களை விரைவாக வழங்குமாறும் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷ் விமானப்படை வீரர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் போர் பயிற்சிகளை பாகிஸ்தான் விமானப்படை மூலம் வழங்குவது குறித்தும் இணக்கம் காணப்படவுள்ளது.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அமைந்துள்ள மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, கடந்த காலங்களில் நிலவிய கசப்பான உறவுகளைக் கடந்து பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவைப் பேண விரும்புவதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் குறைத்து, பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை அதிகரிப்பது பிராந்திய அரசியலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த போர் விமானக் கொள்வனவு மற்றும் இராணுவப் பயிற்சி ஒப்பந்தம் தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியா – பங்களாதேஷ் இடையிலான பாதுகாப்பு சமன்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.