சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

Screenshot 2026 02 15 222008

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய சட்ட உத்தரவுக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தலைவரும், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியுமான பிரீத்தி இனோகா ரணசிங்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். முதற்கட்டமாக ஐந்து அமைச்சுகள், நன்னடத்தை திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் ஊழியர்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை முறையாக அமுல்படுத்துவதற்காக, சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் கைரேகைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசேட தரவுத்தளம் (Database) உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம், கல்வி அல்லது பராமரிப்புப் பணிகளில் ஈடுபட வருபவர்களின் பின்னணியைச் சோதித்து, குற்றவாளிகள் மீண்டும் சிறுவர்களுடன் பணியாற்றுவதைச் சட்டரீதியாகத் தடுக்க முடியும் என பிரீத்தி இனோகா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பாகப் பதிவான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 10,455 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 545 பாலியல் துன்புறுத்தல்கள், 231 பாரிய பாலியல் துஷ்பிரயோகங்கள், 38 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் மற்றும் 9 சிறுவர் திருமணங்கள் உள்ளடங்குகின்றன. இந்த எண்ணிக்கையானது நாட்டில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

 

 

Exit mobile version