அவுஸ்திரேலிய அரசாங்கம், வீடுகளுக்குத் தினமும் 3 மணி நேரம் வரை இலவச மின்சாரம் வழங்கும் ‘சோலார் ஷேரர்’ (Solar Sharer) திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டம் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் இன்று (நவம்பர் 05) இத்திட்டம் குறித்துத் தெரிவித்தார். இது எரிசக்தி சேமிப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உட்பட, அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது 3 மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்கப்படும். இது அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும்.
குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இந்தச் சலுகை கிடைக்கும்.
பயனாளர்கள் ஒரு ஸ்மார்ட் மீட்டரை வைத்திருக்க வேண்டும். அத்துடன், சூரிய மின் உற்பத்தி நேரங்களுக்கு (பகல் நேரத்தில்) தங்கள் ஆற்றல் பயன்பாட்டை மாற்ற, ‘சோலார் ஷேரர்’ திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதன்மூலம் பயனர்கள் பகல் நேரத்தில் இலவச சூரிய மின்சாரத்தைப் பெறுவார்கள்.
கிறிஸ் போவன் இந்தத் திட்டம் பற்றி அறிவித்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின்சார வழங்குநர்களான ஏஜிஎல் (AGL) மற்றும் ஆரிஜின் எனர்ஜி (Origin Energy) ஆகியவற்றின் பங்கு விலைகள் பிற்பகலில் 3 சதவீதம் சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

