ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்டியின் நார்ட் (Nord) மாகாணத்தில் உள்ள 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற லாஃபெரியர் (Citadelle Laferrière) கோட்டையிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரான்சிடமிருந்து ஹைட்டி சுதந்திரம் பெற்ற பிறகு கட்டப்பட்ட இந்தக் கோட்டை, அந்நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான இங்கு நடைபெற்ற வருடாந்திர கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமையன்று ஏராளமான மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் கோட்டைக்குள் அதிகளவான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலைத் தணிக்க முடியாமல் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நார்ட் மாகாணத்தின் குடிமைப் பாதுகாப்புத் தலைவர் ஜீன் ஹென்றி பெட்டிட் குறிப்பிட்டுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஹைட்டி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.