முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக நேற்று (26.10.2025) ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகளுக்கு இலங்கை இராணுவத்தினர் இடையூறு விளைவித்துள்ளனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகள் தொடங்கப்பட்டு, துயிலும் இல்லத்தின் முன்பகுதியில் வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்ல வளாகத்தின் ஒரு பகுதி இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், வேலி அமைக்கும் பணிகள் இராணுவ முகாமுக்கு அருகில் இடம்பெற்றபோது, அங்கு வந்த இராணுவத்தினர், அப்பகுதியில் வேலி கம்பங்களை அமைக்க வேண்டாம் எனத் தெரிவித்து இடையூறு அளித்துள்ளனர்.
இராணுவத்தின் இடையூறையும் மீறி, துயிலும் இல்ல நிர்வாகத்தினர் குறித்த பகுதிக்கான வேலி அமைக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ,ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்களையில் . இவ்வாண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற அனைத்து சிரமதானப் பணிகளும் ஏனைய ஏற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்தப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது மிக நெருக்கடியான சூழ்நிலையிலேயே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இந்த அரசாங்கமாவது மாவீரர் துயிலும் இல்ல காணியை முழுமையாக விடுவித்துத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.