இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி படைவீரர் கொடி நாளாகக் (Armed Forces Flag Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்றைய தினமும் இந்நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நாளில், முப்படை வீரர்களின் வீரம், தியாகத்தைப் போற்றி, அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் படைவீரர் கொடி நாள் நிதி சேகரிக்கப்படுகிறது.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போரில் வீரமரணமடைந்த, காயமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நன்கொடை நிதி அளித்து வருகின்றனர்.
படைவீரர் கொடி நாளை ஒட்டி முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நிதி அளித்தார். மேலும், படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

