தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது, 2023-இல் தேசிய மக்கள் சக்தி (NPP) எதிர்த்த அதே சட்டமூலத்தைப் போன்றே காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், 2023-இல் அன்றைய அரசாங்கம் கொண்டுவந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (ATA) எதிர்த்து, தற்போதைய அமைச்சர் விஜித ஹேரத் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், இன்று அதே உள்ளடக்கத்தைக் கொண்ட ஒரு சட்டத்தை NPP அரசாங்கம் முன்மொழிந்திருப்பது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜனநாயகத்தைப் பேசிய NPP, தற்போது பாதுகாப்புத் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்த வரைவை வெளியிட்டுள்ளது.
979-ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், தற்போதைய புதிய வரைவில் பல மோசமான மற்றும் கடுமையான பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
இந்த வரைவைத் தயாரித்த நிபுணர் குழுவிலுள்ள பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள், இந்தச் சட்டம் கூடப் பயங்கரவாதத்தைத் தடுக்கப் போதாது எனக் கூறி முரண்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்துத் தாம் முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும், அதன் பின்னர் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நீதியமைச்சுக்குக் கடிதம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.