தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள பெக்கெர்ஸ்டால் (Bekkersdal) பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதுடன், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் பெக்கெர்ஸ்டால் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தபோது, இரண்டு கார்களில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
கார்களில் இருந்து இறங்கிய நபர்கள் அரை நிமிடத்திற்கும் மேலாகக் கூட்டத்தை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிச் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் இம்மாதத்தில் இடம்பெறும் இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.
கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி பிரெட்டோரியாவில் நடந்த தாக்குதலில் 3 வயதுக் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்திருந்தனர். தனிநபர்கள் துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள எளிமை மற்றும் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளமையே இவ்வாறான வன்முறைகளுக்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்கப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சமூக விரோதக் கும்பல்களுக்கு இடையேயான பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

