டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொடருந்து மார்க்கத்தில் மொத்தம் 1593 கிலோமீட்டர் தூரம் சேதமடைந்திருந்தது.
இதுவரை 1254 கிலோமீட்டர் வரையான மார்க்கங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எஞ்சிய பகுதிகளை விரைவில் சீர்செய்யும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை பின்வரும் மார்க்கங்களில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பேராதனை ஊடாக மாத்தளை வரையான பகுதி மற்றும் ரம்புக்கனையிலிருந்து அம்பேவல வரையான பகுதி (நிலச்சரிவு காரணமாகப் பாதிப்பு).
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாத்தான்டியாவிலிருந்து புத்தளம் வரையான தொடருந்து மார்க்கம் சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இந்த மார்க்கங்களை விரைவாகப் புனரமைத்து, பொதுமக்களின் போக்குவரத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

