5 வயது சிறுமி சித்திரவதை: தாயின் கள்ளக்காதலன் கொடூரம்! – சந்தேக நபர் தலைமறைவு!

image 1843c289c1

மட்டு. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் 23 வயது பெண்ணின் 5 வயது மகளுக்கு, அவரது தாயாரின் கள்ளக்காதலன் உடல் முழுவதும் சூடு வைத்து அடித்துச் சித்திரவதை செய்ததில் சிறுமி படுகாயமடைந்தார். சிறுமி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்திரவதை செய்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த அந்தப் பெண், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒருவருடன் பேசிப் பழகி வந்துள்ளார். குறித்த ஆணின் மூலம் கொழும்பில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, அந்தப் பெண்ணையும் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கொழும்பில் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து, அந்த ஆண் சிறுமிக்குச் சூடு வைத்து அடித்துச் சித்திரவதை செய்துள்ளார். இதனால் சிறுமியின் வாய், கை, கால், முதுகு உட்பட உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியுடன் தாயார் கொழும்பிலிருந்து மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய பின்னர், ஞாயிற்றுக்கிழமை (அக் 19) சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு, கொழும்பில் தனக்கு நடந்ததைச் சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version