புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆணமடுவ, சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவன்.
நேற்று (29) இச்சிறுவனின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார். பாட்டியின் வீட்டிலிருந்து மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்த போதே, மழையினால் நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் சிறுவன் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளார்.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வராததால் தேடியபோது, குழிக்குள் மூழ்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
இன்று (30) மேற்கொள்ளப்பட்ட மரணப் பரிசோதனையில், சிறுவன் நீரில் மூழ்கியமையாலேயே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணமடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலம் என்பதால் பள்ளங்கள் மற்றும் குழிகளில் நீர் நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது சிறு பிள்ளைகள் தொடர்பில் மேலதிக அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு காவல்துறையினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.