நடுக்கடலில் படகு விபத்து – 52 பேர் மாயம்
ஸ்பெயின் நாட்டின் கடற்பரப்புக்குள் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படகில் பயணித்த 52 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அகதிகள் 53 பேருடன் ஆபிரிக்க நாடான ஐவரிகோஷ்ட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியூடாக ஸ்பெயினை நோக்கி குறித்த படகு சென்றுள்ளது. இந்த படகு ஸ்பெயினின் நடுக்கடலில் ஹனரி தீவுக்கு அருகாமையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் தகவல் அறிந்து, அங்கு சென்ற மீட்புப் படையினரால் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்துக்கு உள்ளான படகின் உடைந்த பாகமொன்றைப் பிடித்தபடி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணே மீட்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
படகில் பயணித்த மிகுதி 52 பேரும் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி மீட்புப் படையினரால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும், படகு கவிழ்ந்து நீண்ட நேரம் ஆகியுள்ளதால் குறித்த 52 பெரும் இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.