இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ (Didwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவுகளால், நாட்டின் மத்திய மலைநாட்டு இயற்கை வனப்பகுதிகளில் 34 சதவீதம் பாரிய சேதங்களைச் சந்தித்துள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழு தனது பூர்வாங்க அறிக்கையைச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திகவிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி மத்திய மலைநாட்டின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகள் மண்சரிவுகளால் சிதைக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, இப்பகுதியிலுள்ள 34 வீதமான காடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிவடைந்துள்ளன.
இலங்கையின் பிரதான ஏழு நதிப் படுக்கைகளின் (River Basins) சுற்றுச்சூழல் சமநிலை இந்த அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலைநாடு மட்டுமன்றி, நாட்டின் கடலோரச் சூழல் மற்றும் களப்புப் (Lagoons) பகுதிகளும் இந்தச் சூறாவளியினால் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்திக இது குறித்துக் கூறுகையில், நாட்டின் இதயமாக விளங்கும் மத்திய மலைநாட்டின் வனப்பரப்பு இவ்வளவு பெரிய அளவில் சேதமடைந்திருப்பது பாரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாகும் என்றும், இதனைச் சீரமைக்க நீண்டகாலத் திட்டங்கள் அவசியமென்றும் குறிப்பிட்டுள்ளார்.