இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து இன்று (நவம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், படகோட்டிகள் மூவர் உட்பட 31 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் (நவம்பர் 17) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தமிழக கடற்றொழிலாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டனர்.
இலங்கை கடற்பரப்பினுள் படகினை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காகப் படகோட்டிகள் மூவருக்கும் 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அது 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏனைய 28 கடற்றொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத் தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒத்திவைக்கப்பட்ட 10 வருட காலப் பகுதிக்குள் மீண்டும் எல்லை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்படும் காலப்பகுதியில் விதிக்கப்படும் தண்டனையுடன், ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையும் கூடுதலாக விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளர்களுக்குப் படகு தொடர்பான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.