வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குச் சிகரெட்டுகளைக் கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுமார் 232 மில்லியன் சிகரெட்டுகளை இலங்கைச் சுங்கத் திணைக்களம் தீயிட்டு அழித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் கைப்பற்றப்பட்ட 232,804,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன.அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் 305 மில்லியன் ரூபா ஆகும்.
கெரவலப்பிட்டியவில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் வைத்து இவை எரிக்கப்பட்டன.இவை சந்தைக்குள் நுழைந்திருந்தால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 271 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்கப் பணிப்பாளர் வந்தனா புஞ்சிஹேவா முன்னிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பயணிகள் கவனத்திற்கு மீண்டுமொரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது:
இலங்கைச் சட்டத்தின்படி, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைக் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை.தடையை மீறிச் சிகரெட்டுகளைக் கொண்டு வருபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.